Friday, February 13, 2009

விடுதலை - 4




அவன் மொழியை துறந்ததன் பின்னணியில் பல உருக்கமான, இறுக்கமான காட்சிகள் கடந்து சென்றுள்ளன. தமிழ்தான் அவனுடைய தாய்மொழி ஆனால் அவனின் கல்வி ஆங்கிலவழி யாகவே இருந்தது. தமிழைவிட ஆங்கிலம் அவன் நாவில் சாரளமாக குடிகொண்டிருந்தது. அவனுடய நட்பு வட்டாரமும் அப்படியே இருந்தது.

அவனின் கல்லூரி வாழ்க்கை, உற்சாகமும் உல்லாசமுமாக, குறும்பும் கூத்துமாக தடையில்லா காற்றைப் போல் சென்றது. அவன் மாபெரும் செல்வந்தரின் ஒரே மகன் என்பதால் அப்படியொரு வாழ்க்கை சாத்தியமாயிற்று. கல்லூரியில் எப்போதும் ஐந்து ஆறு பேர் கொண்ட கூட்டத்துடன் திரிந்தன். உலகில் எந்த ஒரு நிகழ்வும் அவனையும் அவன் நட்பு வட்டாரத்தையும் பாதித்தது இல்லை. தமிழகம் முழுவதும் பந்த் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. முதன் முதலில் அவன் அறிந்து கொண்ட, பங்கெடுத்துக்கொண்ட இந்த நிகழ்வு தான் அவனின் மொழி துறவுக்கு புள்ளி வைத்தது...

விடுதலை - 3




இவர்களுக்கு மத்தியில்...

முற்றிலும் துறந்தவன் என சொல்லிக்கொண்டு காவி உடையில் பாலும், பழமும் உண்டு கொழுத்து, உயிர் வாழ்ந்து கொண்டிருப் பவர்களைப் போல் அல்லாமல், உண்மையிலேயே முற்றும் துறந்த ஒருவன் இடப்பக்கமாக செல்ல வேண்டிய சாலையில் வலப்பக்கமாக சென்று கொண்டிருந்தான்.

காலைப் பொழுதின் ஒளி வெள்ளத்தில், அவன் துறவறத்தை கண்ட அனைவரும், ச்சீசீ..., கடவுளே..., சிவசிவா... என முனங்கியவரே கண்களை முடிக்கொண்டு கடந்து சென்றனர். இருந்தும் திரும்பி பார்க்காமல் செல்லவில்லை.

சுமார் இருபத்தி மூன்று வயது மதிக்கத்தக்கவனாக இருந்தான் அந்த ஆடைகளை இழந்த துறவி. இளமையும், புஜ பலமும் அவன் நிர்வாணத்தை துறவா இல்லை திமிரா? என கேள்விக்குறி ஆக்கின.

நிர்வாண மனிதனால் போக்குவரத்து சற்று சீர்குலைந்து போனது. வாகனங்கள் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்ள சாலை எங்கும் களேபரமானது போக்குவரத்து காவலர்கள் எரிச்சலின் உச்சத்துக்கே போனார்கள். சில நிமிடங்களில் செய்தி காவல் துறையின் உயர் அதிகாரிக்ளை சென்றடைந்தது. அதிரடியாக நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டன.

எதுவும் இல்லாதவனைப் பார்த்து நம்மை ஏதாவது செய்து விடப் போகிறான், என்று அவனை நெருங்க யாரும் முன்வரவில்லை. விலகி வேடிக்கைப் பார்த்தவரே, சிலர் அவனை பின் தொடர்ந்தனர்.

அவனை நோக்கி ஓர் காவல் வாகனம் சீறிவந்து முன் நின்றது. வண்டியிலிருந்து நான்கு காவலர்கள் வேகமாக குதித்து, அவன் மேல் போர்வை போர்த்தி அப்படியே இழுத்து வண்டியில் ஏற்றினார்கள். யாருடா நீ? பிடித்தவர்கள், பிடிபட்டவனை பார்த்து கேட்கும் முதல் கேள்வி. அவனிடமும் அதுவே கேட்கப்பட்டது உள்ளிருந்த உயர் அதிகாரியால். பதில் இல்லை, இருந்தும் பெயர் என்ன, வயசு என்ன, அப்பா அம்மா பேரு என்னடா? என அடுக் கடுக்கான கேள்விகள்... அத்தனைக்கும் பதில் கூறாமல் மெளானி யாய் இருந்தான்.


காரணம் அவன் ஆடைகளை மட்டுமல்ல மொழியையும் துறந்திருந்தன்...

Friday, February 6, 2009

விடுதலை - 2



ஒவ்வொரு ஆறாவது அறிவு பிறக்கும் போது அழிவு என்ற கர்ப்பம் தரித்தே பிறக்கிறது. கர்ப்பத்தில் உள்ள கரு பிறப்பில் அழகாக தோன்றினாலும் அதன் உருவம் மெல்ல மெல்ல அரக்க உருவத்தையே அடைகிறது. முதலில் அதனிடத்தில் அன்பு, பண்பு, வளமை, இனிமை என எல்லாம் இருக்கும். சில கால இடைவெளியிலேயே அது அரக்கனாக மாறி, புயல் காற்றில் பறவும் தீயைப் போல் திசை எங்கும் சீறிப் பாய்ந்து மனித குலத்தோடு போர் தோடுக்கும்.
சீறும் வாகனங்கள், வண்ணங்களாலும் வடிவங்களாலும் கம்பீரமான கட்டிடங்கள், தேவைகளைக் கூறும் அலங்கார அறிவிப்பு பலகைகள், பளபளக்கும் சாலை, சாலையை இரண்டாக பிரிக்கும் பசுமை பூங்காக்கள் என ஆறாவது அறிவு பூத்துக் குளுங்கும் ஒரு மாநகரின் பிரதான சாலை, காலை வேளையில் இயந்திரகதியாய் இயங்கிக் கொண்டிருந்தது. சாலையில் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் சிந்தனை அலைகளிலும், ஆசை மனங்களிலும் பயணித்துக் கொண்டிருக்க...
இவர்களுக்கு மத்தியில்...

விடுதலை - 1



எது ஆறாவது அறிவு?


விலங்கிடமிருந்து மனிதைனை பிரித்துக்கட்டும் அந்த அறிவின் உருவம் என்ன? செயல் என்ன? மனிதர்கள் ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமை யால் அடித்துக்கொள்ளும் அந்த செயலா? அவ்வாறு அடித்துக்கொள்ளும் போது மனித உடம்பிலிருந்து சிதறி தரையில் வழிந்தோடும் இரத்தமா... அதன் உருவம்?...


மனிதனின் ஆறாவது அறிவுக்கு செயல் ஒன்றில்லை, உருவம் ஒன்றில்லை. கணக்கில் அடங்காத செயல்களும், கண்ணுக்கே புலப்படாத உருவங்களும், ஒவ்வொரு மைக்ரொ வினாடியிலும் கோடிக்கணக்கில் மனிதனிடமிருந்து பிறந்து இறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆறாவது அறிவு பிறக்கும் போதும்...

Wednesday, January 28, 2009

VIDUTHALAI from SIXTH SENSE

மனித மிருகங்களுக்கு வணக்கம்.
என்ன ரொம்ப அதிர்ச்சியா இருக்கா?
மனிதன் மிருக இனத்தை சேர்ந்தவன் என்பதை மறந்தே போய் விட்டீர்கள். அந்த உண்மையை உரைக்க சொல்லத்தான் VIDUTHALAI from SIXTH SENSE என்ற என் முதல் எழுத்துப் பயணம்.

Thursday, July 3, 2008

குசேலன் - காக்கா கூட்டத்தின் கரைச்சல்!






குசேலன் படத்தின் இசை கடந்த திங்கள் கிழமை வெளியிடப்பட்டது.

விழாவினை காண வாய்ப்பும் கிடைத்தது.

ஆனால் பாடலை இதுவரை காதில் கேட்க வாய்ப்பே இல்லாம்ல் போய்விட்டது

காசு கொடுத்து சீடி வாங்கியும் நல்ல மியுஸிக் சிஸ்டத்தில் போட்டும், பாடலை காது கொடுத்து கேட்கமுடியாமலே போய்விட்டது.

இசையும் பாடல் வரியும் நீயா நானா என போட்டி போட்டு, காசு கொடுத்து வாங்கியவன் காதில் பெரிய குண்டை போட்டுவிட்டது.


விழாவில் ரஜினி “குசேலன் படத்தில் முதலில் இசைக்காக என் மனதி்ல் வந்தவர் இளையராஜா தான்” என்றார்.

அவர் ஆசை நிறைவேறியிருந்தால் நல்ல இசை அரங்கேறியிருக்கும் குசேலனுக்காக.


பாடல் வெளியானவுடன் ரஜினி ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய ‘முத்து’ படத்தில் கூட ‘ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி’ என நல்ல வரிகள் அமைந்த பாடல் இருந்தது.


இரண்டு லட்சம் சீடிக்கள் விற்று சாதனை படைத்திருக்கும் ‘குசேலன்’ அதே சமயத்தில் ஓரிரு தினங்களுக்குள்ளேயே நான்கு லட்சம் காதுகளை பதம் பார்த்த சாதனையையும் சேர்ந்து படைத்திருக்கிறது.


இனியொருமுறை தப்பிதவறி வெள்ளையன் நம் நாட்டை கைப்பற்றினால் அவனை வெளியேற்ற அகிம்சையான ஒரு ஆயுதம் ரெடி ‘குசேலன் குண்டு’.




Monday, June 16, 2008

தசாவதாரம் - கமல் மாட்டிய கம்மல்!





கமல்கள் நடித்த தசாவதாரம் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆசைபட்டு இரவு காட்சி பார்க்க முடிந்தது.


நடிகர், பாடகர், நடன கலைஞர் என்ற அவதாரத்துடன் கமல் தற்போது கதை மற்றும் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என்ற தொழில்நுட்ப அவதாராங்ளையும் எடுத்துவருவதால், இப்போது கமலின் படங்கள் சர்ச்சையில்லாமல் வெளிவருவதில்லை.


தசாவதாரமும், கதைக்கான உரிமையிலிருந்து கதைவரை படம் வெளிவருதற்கு முன்னே நீதிமன்றம் வரை சர்ச்சையாகி விவாதிக்கப்பட்டு, வழக்குகளின் தடைகளிருந்து வெளிவந்து திரையரங்குகளில் மக்களின் எதிர்ப்பார்ப்பு வெள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.


நடிகர் கமல்களை பார்க்க வந்த ரசிகபெருமக்களுக்கு நல்ல விருந்து படைத்துள்ளார் என்று சொலல்த்தோன்றும் அதேவேளையில் ஒப்பனையால் கமல்களின் நடிப்பு ஓவியப் பொம்மைகளை கொண்டு படத்தில் அசின் போடும் நாடகம் போல் ஆகிவிட்டது. அவதார கமல்களின் ஒவ்வொரு ஒப்பனையும், அவரை காட்சிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற முகபாவனைகளை வெளிப்படுத்த முடியாமல் சதி செய்துள்ளன என்பது திரையில் வடு இல்லாமல் தெரிகிறது.


நான் ரசித்த, அன்பே சிவம் படத்தில் விபத்துக்கு பிந்தைய நடிப்பு, தெனாலியில் நம்மை துயரத்தில் ஆழ்த்திய நடிப்பு, நாயகன் படத்தில் வயதான கமலின் இயல்பான நடிப்பு இவைகளுக்கு முன்னால் தசாவதார கமல்களின் நடிப்பு துடிப்பில்லாமல் போய்விடுகிறது.


அவதார ஆசை நடிப்பாசையை சாகடித்துவிட்டது.




கதை ஆசிரியர் கமல் தான் சொல்ல நினைத்த கதை என்ன என்பதை நாம் தனியாக கடிதம் எழுதி தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் இருப்பது போல் தெரிகிறது.


பனிரெண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கும் கதை ஆசிய கண்டத்தை துயரத்தில் ஆழ்த்திய சுனாமி பேரலையில் முடிவடைகிறது.


இவ்வளவு பெரிய கதையா என ஆச்சர்ய படவேண்டாம்!


பனிரெண்டாம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று சம்பவத்தின் தடயம் சுனாமி பேரலையில் வெளிவருகிறது அவவ்ளவே!




தமிழகத்தை மட்டுமல்லாது ஆசிய கண்டத்தின் வருமை மிக்க நாடுகளான இந்தோனேசியா, இலங்கை என பாதிக்கப்பட்ட தேசத்தின் மக்களையும், பாதிப்பை உணர்ந்த உலகமக்களையும் இன்றுவரை அதன் அதிர்ச்சி அலைகளில் கட்டிப்போட்டிருக்கும் சுனாமி பேரலை எழும்பியதற்கான காரணம் இதுவாகக்கூட இருக்கலாம் என, தனது கற்பனையான காரணத்தை சொல்ல முற்பட்டிருக்கிறார் கமல்.




சுனாமிக்கான காரணம் பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கை நடத்தி வரும் சீற்றத்தின் ஒரு நிகழ்வே தவிர அதில் வேரு எந்த காரணும் இல்லை.


என விஞ்ஞானிகள் முதல் மெய்ஞ்ஞானிகள் வரை ஒப்புக்கொண்ட உண்மை!




தமிழகத்தில் சுனாமியின் தாக்கம் மிகமிக கொடூரமாக இருந்தது. அதானல் பெற்றோரை இழந்து அனாதையான குழந்தைகளும், குழந்தைகளை இழந்து அனாதையான பெற்றோர்களும் இன்றுவரை மீளாத சோகத்தில் உள்ளனர்.




துயரமிக்க ஒரு நிகழ்வுக்கான காரணம் இதுவாகக்கூட இருக்கலாம் என பனிரெண்டாம் நூற்றாண்டில் மூடமூர்கக்த்தன மனிதர்களுக்கிடையில் நடந்த சமய மோதலால் கடலில் மனிதனோடு(கமலோடு) மூழ்கிடக்கப்பட்ட கல்லான கடவுள் சுனாமியில் வெளிவருவதும்!


அமெரிக்க விஞ்ஞானி கண்டுபிடித்த, பயங்கர அழிவை தரக்கூடிய, ஒரு பயோ ஆயுதத்தை அழிக்க கடலளவு உப்பு தேவைப்பட சுனாமி வருவதும்!




இப்படி சித்தரிப்பது, சுனாமி பாதிப்பின் துயரத்தில் உள்ள மனிதர்களை மேலும் துயரப்படுத்துவது போல் உள்ளது.




கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கான விடை சொல்ல முற்பட்டிருக்கிறாரா?




விஞ்ஞானம் ஆக்கத்திற்கு மட்டுமல்லாமல் மனிதகுல அழிவுக்கான விசயங்களையும் செய்துவருகிறது என்ற மெசஜை சொல்லவருகிறாரா?


அமெரிக்காவை பாராட்டுகிறாரா? அல்லது விமர்சிக்கிறாரா?


என சிலபல கேள்விகளுக்கு குழம்பித்திரியும் அவர் மனநிலையை தெளிவாக திரைக்கதைப்படுத்தியிருக்கிறார்.


வசனகர்த்தாவாக பல இடங்களில் பாராட்டை பெற முனைந்திருக்கிறார்... அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்...

அமெரிக்கன்: ஹிரோசிமா ஞபாகம் இருக்கா?

ஜப்பான்: பேர்ல் ஹார்பர் ஞபாகம் இருக்கா?

என பல வரலாற்று சம்பவங்களை பாத்திரங்களுக்கு கொண்டுவந்து பயன்படுத்தியது

பூவராகவன் பேசும் உரையாடல்கள் என பல இடங்களில் வசனகர்த்தா கமல் வெற்றி பெற்றிருக்கிறார்.


இந்த படத்தில் பாராட்ட வேண்டிய ஒரே விசயம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் நிஜமான இந்திய அரசியல் தலைவர்களை திரைக்கதையில் கொண்டுவந்தது!


படத்தில் அசின் பாத்திரம் கமல் எடுத்துக்ககொண்ட கடவுள் கதைக்கு வலு சேர்ப்பதாக இருந்தாலும் என்னைப்போன்ற பாமரனுக்கு எரிச்சலாகவே இருந்தது.


அசின் செய்யும் கேணத்தனமா செயல்களால் ஏற்படும் மிகப் பெரிய விபத்து உட்பட எல்லா செயல்களும் கடவுள் அருளால் காப்பற்றப்படுகிறது.


ஒப்பனை போடவேண்டுமா? அல்லது முகமூடி போடவேண்டுமா? என்பதை கமல் தனது முந்தை சிறந்த படங்களிருந்தும் தசாவரதாரத்திலிருந்தும் கற்று தெளிவடைந்தால் நல்லாயிருக்கும் என என்னை போன்றவர்களின் ஆவலாக உள்ளது.

தசாவதாரம் - அவருக்கு படம் எனக்கு பாடம்!
தசாவதாரம் - கமல் மாட்டிய கம்மல்!