Friday, February 13, 2009

விடுதலை - 3




இவர்களுக்கு மத்தியில்...

முற்றிலும் துறந்தவன் என சொல்லிக்கொண்டு காவி உடையில் பாலும், பழமும் உண்டு கொழுத்து, உயிர் வாழ்ந்து கொண்டிருப் பவர்களைப் போல் அல்லாமல், உண்மையிலேயே முற்றும் துறந்த ஒருவன் இடப்பக்கமாக செல்ல வேண்டிய சாலையில் வலப்பக்கமாக சென்று கொண்டிருந்தான்.

காலைப் பொழுதின் ஒளி வெள்ளத்தில், அவன் துறவறத்தை கண்ட அனைவரும், ச்சீசீ..., கடவுளே..., சிவசிவா... என முனங்கியவரே கண்களை முடிக்கொண்டு கடந்து சென்றனர். இருந்தும் திரும்பி பார்க்காமல் செல்லவில்லை.

சுமார் இருபத்தி மூன்று வயது மதிக்கத்தக்கவனாக இருந்தான் அந்த ஆடைகளை இழந்த துறவி. இளமையும், புஜ பலமும் அவன் நிர்வாணத்தை துறவா இல்லை திமிரா? என கேள்விக்குறி ஆக்கின.

நிர்வாண மனிதனால் போக்குவரத்து சற்று சீர்குலைந்து போனது. வாகனங்கள் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்ள சாலை எங்கும் களேபரமானது போக்குவரத்து காவலர்கள் எரிச்சலின் உச்சத்துக்கே போனார்கள். சில நிமிடங்களில் செய்தி காவல் துறையின் உயர் அதிகாரிக்ளை சென்றடைந்தது. அதிரடியாக நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டன.

எதுவும் இல்லாதவனைப் பார்த்து நம்மை ஏதாவது செய்து விடப் போகிறான், என்று அவனை நெருங்க யாரும் முன்வரவில்லை. விலகி வேடிக்கைப் பார்த்தவரே, சிலர் அவனை பின் தொடர்ந்தனர்.

அவனை நோக்கி ஓர் காவல் வாகனம் சீறிவந்து முன் நின்றது. வண்டியிலிருந்து நான்கு காவலர்கள் வேகமாக குதித்து, அவன் மேல் போர்வை போர்த்தி அப்படியே இழுத்து வண்டியில் ஏற்றினார்கள். யாருடா நீ? பிடித்தவர்கள், பிடிபட்டவனை பார்த்து கேட்கும் முதல் கேள்வி. அவனிடமும் அதுவே கேட்கப்பட்டது உள்ளிருந்த உயர் அதிகாரியால். பதில் இல்லை, இருந்தும் பெயர் என்ன, வயசு என்ன, அப்பா அம்மா பேரு என்னடா? என அடுக் கடுக்கான கேள்விகள்... அத்தனைக்கும் பதில் கூறாமல் மெளானி யாய் இருந்தான்.


காரணம் அவன் ஆடைகளை மட்டுமல்ல மொழியையும் துறந்திருந்தன்...

No comments: